Factcheck

“சர்காரியா சர்க்கரை எங்கே? எறும்பு தின்னுடுச்சு. சாக்கு எங்கே? எலி தின்னுடுச்சு” எனத் தேர்தல் பரப்புரையில் சீமான் சொன்ன தகவல் பொய்யானது!

Seeman Factcheck and The Media Monitoring Logo

கூற்று:
சர்காரியா சர்க்கரை எங்கே? எறும்பு தின்னுடுச்சு, சாக்கு எங்கே? எலி தின்னுடுச்சு எனப் பதிலளித்ததாக தேர்தல் பரப்புரையில் கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சரிபார்ப்பு:
04.04.2024 அன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாம்பரத்தில் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையில் “சர்காரியா சர்க்கரை எங்கே? எறும்பு தின்னுடுச்சு. சாக்கு எங்கே? எலி தின்னுடுச்சு” எனப் பதிலளித்ததாக கூறியுள்ளார்.

சீமான் பேசிய காணொலி நாம் தமிழர் கட்சியின் YouTube பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது.
https://youtu.be/WmZsjDw8WGc?si=9Vuggfqft7E59fTk
ஒரு மணி நேரம் மூன்று நிமிடங்கள் ஒரு நொடி நீளமுள்ள இந்தக் காணொலியிலின் 54 ஆம் நிமிடம் 32 ஆம் நொடியில் “சர்காரியா சர்க்கரை எங்கே? எறும்பு தின்னுடுச்சு. சாக்கு எங்கே? எலி தின்னுடுச்சு” எனப் பதிலளித்ததாக சீமான் கூறியுள்ளார்.

அதன் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள சர்காரியா ஆணையத்தின் இரண்டு தொகுதிகளைக் கொண்ட அறிக்கையில் தேடத் தொடங்கினோம்.

காப்பகப்படுத்தப்பட்ட அறிக்கை
https://archive.org/details/275-pages-vol-1-preliminary-report-of-sarkaria-commission/%28214%20pages%29%20Vol%202%20%28Final%20Report%29%20of%20Sarkaria%20Commission/mode/1up?q=Rat

சர்காரியா ஆணையத்தின் முதல் பகுதி 275 பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. அதில் எறும்பு தின்றதாக எங்கேனும் உள்ளனவா எனத் தேடிப் பார்த்தோம். எறும்பினை குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Ant ஐ உள்ளிடாகக் கொடுத்து 275 பக்கங்கள் கொண்ட முதல் தொகுதியில் தேடிய போது 773 முடிவுகள் நமக்கு கிடைத்தாலும், ant தனிச் சொல்லாக எங்கும் இடம்பெறவில்லை. Relevant, want, grant, anticipation போன்ற சொற்களில் தான் ant இடம்பெற்றிருக்கின்றன.

214 பக்கங்கள் கொண்ட இரண்டாம் தொகுதியில் தேடிய போது 764 முடிவுகளைத் தந்தது. அதிலும், ant தனிச் சொல்லாக எங்கும் இடம்பெறவில்லை.

சர்காரியா அறிக்கையில் எங்கேனும் எலி தின்றது குறித்து ஏதேனும் குறிப்பு உள்ளதா எனத் தேடிய போது mice மற்றும் mouse ஆகிய சொற்களைக் கொண்டு தேடியதில் இரண்டு தொகுதிகளிலும் ஏதும் கிடைக்கவில்லை.

Rats எனத் தேடிய போது முதல் தொகுதியில் எதுவும் இல்லை. இரண்டாம் தொகுதியில் Bureaucrats and Technocrats ஆகிய இரண்டு சொற்களில் உள்ள rats மட்டுமே முடிவுகளாக கிடைத்தது.

முடிவு:
04.04.2024 அன்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தாம்பரத்தில் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையில் சர்காரியா ஆணையம் குறித்து பேசிய தகவல் பொய்யானது என The Media Monitoring உறுதி செய்கிறது.

முரளிகிருஷ்ணன் சின்னதுரை
முதன்மை ஆசிரியர்

Shares: