கூற்று:
பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தை மறைக்காமல் செய்தி வெளியிட்டு அதனை X தளத்தில் பதிவேற்றம் செய்த பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி
சரிபார்ப்பு:
மது போதையில் கர்நாடகாவைச் சேர்ந்த காருக்கு வழிவிடாமல் தகராறு… பெண்ணைத் தாக்கிய போதை ஆசாமியை அடித்து விரட்டிய பொதுமக்கள் என X தள Polimer News பக்கத்தில் அதன் செய்திக் காணொலியை பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்.
அச்செய்தித் தொகுப்புக் காணொலியில், சேலம் மாவட்டம் ஓமலூரில் பெண் ஒருவர் தங்களிடம் தகராறு செய்த ஆண் நபருடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அக்காட்சிகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தை மறைக்காமலே செய்தியை வெளியிட்டிருக்கிறது பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி.
(அச்செய்தித் தொகுப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முகம் மறைக்கப்படாததால் அப்பதிவின் இணைப்பு இங்கு இணைக்கப்படவில்லை)
பாலிமர் நியூஸ் X தளப் பக்கத்தில் இருந்து திரைப்பிடிப்பு எடுத்து பாதிக்கப்பட்டவரின் The Media Monitoring முகத்தை மறைத்துள்ளது.
பொதுவாக, இதுபோன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட நபர்களின் அடையாளங்களை அவர்களின் பாதுகாப்புகாக பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்பது தான் ஊடக அறம்.
பொதுவெளியில் வெளியிட்டு பரவலாகும் பொழுது பாதிக்கப்பட்ட நபர் எதிர்கொள்ளவிருக்கும் அச்சுறுத்தல் என்னவென்று நம்மால் அறிய முடியாது. அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்ட நபரின் உளவியலையும் அது பாதிக்கக் கூடும். தொடர்பே இல்லாத நேரத்தில் கூட அக்காணொலி மீண்டும் சமூக ஊடகங்களில் பரவக்கூடும்.
அதற்கு பாதிக்கப்பட்ட நபர் விளக்கம் சொல்வது கூட அவருக்கு உளவியல் அயற்சியை ஏற்படுத்தக் கூடும்.
முடிவு:
பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தை மறைக்காமல் செய்தித் தொகுப்பை வெளியிட்டதோடு அதனை X தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பாலிமர் நியூஸ் ஊடக அறத்தை மீறியதாக The Media Monitoring வகைமைப் படுத்துகிறது.
முரளிகிருஷ்ணன் சின்னதுரை
முதன்மை ஆசிரியர்