கூற்று:
இந்தியாவில் அனைவரும் இலட்சாதிபதிகள், அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்ச ரூபாய் இருக்க வேண்டும். அந்த 15 இலட்சம் எங்கே போனது? என ஆமீர்கான் கேட்பது போல உலவும் காணொலி
சரிபார்ப்பு:
X தளத்தில் ஆமீர்கான் இந்தியில் பேசுவது போல 27 நொடிகள் கொண்ட காணொலி ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அக்காணொலியில்,
दुस्तो अगर आप शूचते हैं कि भारते गरीब देश हैं तो आब बिलकुल गलत सूचते हैं कि यहां का हरे एक नागरिक लक्पति हैं हरे एक किपास कम से कम पंद्रलाक होनी चाही है। क्या का? आपके पास यह रकम नहीं है? तो कहा गय आपके पंद्रलाक रुपे?
जुमलेवादो से रहो सावदान என ஆமீர் கான் பேசுவது போல இருக்கிறது.
மேலே உள்ள இந்தி சொற்றொடர்களின் தமிழாக்கம்
நண்பர்களே! இந்தியா ஏழ்மையான நாடு என நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் மிகத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இங்கே இருக்கும் ஒவ்வொரு நபரும் இலட்சாதிபதிகள். இங்கு இருக்கும் ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் 15 இலட்சம் இருக்கும். என்னது உங்களிடம் அவ்வளவு இல்லையா? அப்போ உங்களுடைய 15 இலட்ச ரூபாய் எங்கே போனது?
ஏமாற்றுபவர்களிடம் கவனமாக இருங்கள் என்பதாகும்.
இது குறித்து நடிகர் ஆமீர்கான் தரப்பிலிருந்து மறுப்புத் தெரிவித்ததோடு, ஆமீர்கானை தொடர்புபடுத்தி ஆழ்போலி காணொலியைப்(Deepfake Video) பரப்புகின்றனர் என மும்பை இணையக் குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கை பல்வேறு ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
காணொலியின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள The Media Monitoring ஆய்வுகளைத் தொடங்கியது. காணொலியை உற்றுநோக்கிய போது உதட்டசைவுக்கும் குரலுக்கும் சில இடங்களில் தொடர்பு இல்லாமல் இருந்தன. மேலும், அதனை உறுதி செய்ய காணொலியைப் பதிவிறக்கம் செய்து காட்சித் தொகுப்பு நிரலியில்(Video Editing Application) உள்ளீடாகக் கொண்டு அதன் மீது இரவுப் பார்வை விளைவைப்(Night Vision effect) பயன்படுத்தினோம். சில இடங்களில் உதடு அசைவுகளும், குரலும் ஒற்றுப்போகாமல் இருந்ததை உறுதி செய்ய முடிந்தது.
பரப்பப்படும் இக்காணொலியின் உண்மையான மூலம் எங்கேனும் இருக்கிறதா என அறிந்துகொள்ள, காணொலியின் திரைபிடிப்பை(Screenshot)
கூகிளின் பட உள்ளீட்டு தேடல்(Reverse image Search) முறையைப் பயன்படுத்தினோம். அத்தேடலில் Satyamev Jayate எனும் YouTube பக்கத்தில் அதே நிற உடை மற்றும் பின்னணியுடன் ஆமீர்கான் பேசும் காணொலியை ஆகஸ்ட் 30,2016 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
அக்காணொலி சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் நான்காம் தொடரின் முன்னோட்டம் தான் பரப்பப்படும் திரிக்கப்பட்ட காணொலியின் மூலம் என்பதனை The Media Monitoring உறுதி செய்தது.
AI Analysis
முடிவு:
இந்தக் காணொலியின் ஒலியை உள்ளீடாகக் கொடுத்து இயந்திர வழிக் கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு ஆமீர்கான் குரலை நகலெடுத்து பொய்ப்பரப்புரை மேற்கொள்வோர் தங்கள் கருத்துகளை உள்ளீடாகக் கொடுத்து ஆமீர்கானின் குரலை ஆழ்போலியாக உற்பத்தி செய்திருக்கிறார்கள் என்பதனை The Media Monitoring உறுதி செய்கிறது.
முரளிகிருஷ்ணன் சின்னதுரை
முதன்மை ஆசிரியர்