முன்குறிப்பு: இந்த சரிபார்ப்பு கட்டுரையின் உள்ளடக்கத்தில் தகாத சொற்கள் இடம்பெற்றுள்ளன. மனம் புண்படும் எனும் எண்ணுவோர் தயைகூர்ந்து படிக்க வேண்டாம்.
கூற்று:
இராமநாதபுரத்தில் ஏன் போட்டியிடவில்லை என உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோதி கூறியதாக புதிய தலைமுறை செய்தி போல வாட்ஸ் ஆப்- ல் பரப்பப்படுகிறது.
சரிபார்ப்பு:
வாட்ஸ் ஆப்-ல் பலமுறை முன் அனுப்பப்பட்ட தகவல் ஒன்றை சரிபார்க்கக் கோரி The Media Monitoring ஐ தொடர்ந்து படித்து வரும் நண்பர் ஒருவர் அனுகினார்.
பலமுறை முன் அனுப்பப்பட்ட தகவலில் புதிய தலைமுறை செய்தி பட அட்டையில் ராமநாதபுரத்தில் ஏன் போட்டியிடவில்லை எனத் தலைப்பிட்டு ஸ்ரீராம பெருமான் பாப விமோசனம் பெற்ற ராமநாதபுரம் இன்று ராவணர்களின் பூமியாக தேச விரோதிகளின் பூமியாக இருக்கிறது. அதனால் அந்த பாவ பூமியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதாலேயே ராமநாதபுரத்தில் போட்டியிடவில்லை.
- உத்தர பிரதேச கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு என அச்சிடப்பட்டிருந்தது. மேலும், அந்த அட்டையில் 09/04/2024 – 01: 30 PM என தேதியும் நேரமும் குறிப்பிடப்பட்டிருந்தன.
இப்படத்தோடு, எவ்வளவு திமிர் இருந்தால், இப்படி தரம் கெட்ட ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது
தமிழ் நாட்டில் உள்ள ஒரு மாவட்டத்தை பற்றி இவ்வளவு கேவலமாகா இவனால் பேச முடியும்.
இதற்காகவே இந்த திருட்டு பிஜேபி நாய்களை தமிழ் நாட்டை விட்டு அடித்து துரத்த வேண்டும்.
எனும் கருத்துகளுடன் அந்தப் படம் வாட்ஸ்ஆப் ல் பலமுறை முன் அனுப்பப்பட்டிருக்கிறது.
இதன் உண்மைத் தன்மையை ஆராயத் தொடங்கிய The Media Monitoring, படத்தில் உள்ள எழுத்து வடிவங்களை பார்த்தது. அதில் பெரிய வேறுபாடுகள் நேரடியாக தெரியவில்லை. முதலில் பாவத்திற்குப் பதிலாகப் பாப எனும் சொல் கையாளப்பட்டிருக்கிறது. பின்னர் உள்ள சொற்றொடரில் பாவ எனும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே சொல்லை இருவேறு எழுத்துகளுடன் பயன்படுத்த மாட்டார்கள்.
மேலும், உறுதி செய்ய புதிய தலைமுறையின் அதிகாரப் பூர்வ முகநூல் பக்கத்தில் இது போன்ற செய்தி அட்டைப் படம் ஏதேனும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறதா எனப் பார்த்த போது,
“காங்கிரஸ் ராமரை இழிவுபடுத்தியிருக்கிறது” எனத் தலைப்பிட்ட செய்தி அட்டை ஒன்றை 09.04.2024 அன்று மதியம் 1:30 க்கு பதிவேற்றம் செய்திருக்கிறது.
அச்செய்தி அட்டையில், ” ராமர் கோயில் நிகழ்ச்சிக்கான அழைப்பை புறக்கணித்தது மூலம், காங்கிரஸ் ராமரை இழிவுப் படுத்தியிருக்கிறது” – உத்தர பிரதேச பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
சில தினங்களுக்கு முன்னால், மோடி பீகாரில் நடைபெற்ற கூட்டத்திலும் கூட ராமர் கோயில் நிகழ்வை புறக்கணித்தவர்கள் தான் I.N.D.I.A கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள் என பேசியது குறிப்பிடத்தக்கது என அப்படத்தில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது.
உள்ளடக்கத்தைத் தவிர படம் வடிவமைப்புகள் எல்லாம் ஒன்று போலவே இருக்கிறது.
முடிவு:
புதிய தலைமுறை வெளியிட்ட செய்தி அட்டையைப் பதிவிறக்கும் செய்து அதன் உள்ளடக்கத்தை மட்டும் மாற்றி போலிச் செய்தி ஒன்றினை வாட்ஸ்ஆப் மூலம் பரப்பப்படுகிறது என்பதனை The Media Monitoring உறுதி செய்கிறது.
முரளிகிருஷ்ணன் சின்னதுரை
முதன்மை ஆசிரியர்