கூற்று:
CAA(Citizenship Amendment Act) சட்டத்தைக் கொண்டு வந்தது காங்கிரசு கட்சி, 2019 மசோதாவை ஆதரித்து தி.மு.க வாக்களித்ததாக நேர்காணலில் கூறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள்.
சரிபார்ப்பு:
ஏப்ரல் 8, 2024 அன்று Raavanaa ராவணா YouTube பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் காளியம்மாளுடைய நேர்காணல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
59 நிமிடங்கள் 35 நொடிகள் உள்ள இந்த நேர்காணல் காணொலியில், 40 வது நிமிடம் 59 ஆம் நொடியிலிருந்து காளியம்மாள்
“எனக்கு இந்தக் கேள்வியும் இருக்குண்ணே! சிறுபான்மையினருடைய பாதுகாவலர் நாங்க தான்னு, மோதிக்கு நாங்க தான் எதிராக நிக்கிறோம் அப்படின்னா CAA சட்டம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் போது மக்களவையில ஒப்புதல் பெறும் போது, 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுகவில இருந்து போயிருந்தாங்க..அவிங்களோட நிலைப்பாடு என்ன?”எனக் கூறியதற்கு நெறியாளர் “என்னம்மா திருப்பித் திருப்பி கேள்வியா கேட்டுட்டு இருந்தா என்னம்மா பண்றது?” எனக் கேட்டார்.
“அவங்க நிலைப்பாடு என்னணே, ஏன் வந்து, வெளிநடப்பு செஞ்சோம்னாங்க, ஏன் வந்து ஆதரிச்சு கையெழுத்து போட்டாய்ங்க. சட்டம் pass ஆகிறதுக்கு 39 பேரும் sign பண்ணாங்கலண்ணே, இது எப்படிணே இது. எப்படி எடுத்துக்கிறது? நாங்கள் கோவப்பட்டு வெளிநடப்பு பண்ணோம், ஆனால், ஆதரிச்சு கையெழுத்துப் போட்டோம் அப்படிங்கிறாரு. இப்ப மோதியை எதிர்த்து வந்து, நாங்க வந்தா தான் மோதியை எதிர்ப்போம் சொல்ற நீங்க எப்படி CAA வை எதிரா நீங்க, ஆதரவா நீங்க கையெழுத்துப் போட்டீங்க, ஆதரவா கையெழுத்துப் போட்டுட்டு…, அதாண்ணே சில நேரம் மக்களை நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கும். வலியா இருக்கும். என்ன காரணம்னா அங்க CAA வை எதிர்த்து, ஆதரித்து கையெழுத்துப் போட்டுட்டு, எதிர்த்து இங்க வந்து பேசுறாங்க. இங்க CAA கூட்டங்கள் நடந்துச்சுலையா, நிறைய ஆர்ப்பாட்டங்கள் நடந்ததுல அங்க வந்து திமுககாரய்ங்க நிறையப் பேர் வந்து பேசுனாய்ங்க. சரி இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது யாருங்க? நான் போன கூட்டத்துல லாம் இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது யாருன்னா அந்த மக்கள் எல்லாரும் பாரதிய ஜனதா கட்சித் தான் கொண்டு வந்ததா நினைச்சிட்டு பேசினாய்ங்க..! ஆனால், உண்மையலேயே கொண்டு வந்தது காங்கிரசு. இந்த ஒரு காரணத்திற்காகவே திமுக-காங்கிரசு கூட்டணி பிரிஞ்சு இருக்கணும்” என நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.
அந்தக் காணொலியை 86 ஆயிரம் பேர் பார்த்து இருக்கிறார்கள்.
காளியம்மாள் கூறியவற்றின் உண்மைத் தன்மையை ஆராயத் தொடங்கியது The Media Monitoring.
யாரெல்லாம் CAAக்கு ஆதரவாக வாக்களித்தனர் என கூகிளில் தேடிய போது,
10.12.2019 அன்று வெளியான The Quint இணையத்தளத்தின் கட்டுரை ஒன்று கிடைத்தது. அதில் ஆதரித்து வாக்களித்த கட்சிகளின் பட்டியலும், எதிர்த்து வாக்களித்த கட்சிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தன.
The Quint வெளியிட்ட ஆதரித்து வாக்களித்தவர் பட்டியல் பின்வருமாறு:
பாரதிய ஜனதா கட்சி
ஒருங்கிணைந்த ஜனதா தளம்
அஇஅதிமுக
சிரோமணி அகாலி தளம்
லோக் ஜன்சத்தா கட்சி
பிஜூ ஜனதா தளம்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு
சிவசேனா கட்சி
எதிர்த்து வாக்களித்தவர் பட்டியல்
இந்திய தேசிய காங்கிரசு
அனைத்து இந்திய திரிணாமுல் காங்கிரசு
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்
AIUDF
AIMIM
சமாஜ்வாடி கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
திராவிட முன்னேற்றக் கழகம்
பகுஜன் சமாஜ் கட்சி
ஆம் ஆத்மி கட்சி
ராஷ்ட்ரிய ஜனதா தளம்
CAA எப்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது எனத் தேடிய போது
https://loksabhadocs.nic.in/Refinput/New_Reference_Notes/English/09122019_104728_1021205239.pdf
தேசியத் தகவல் மையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கிடைத்த கோப்பினை பார்த்த போது CAA சட்டம் குறித்து முதன்முதலாக 7 செப்டம்பர் 2015 அன்று இந்திய அரசால் அறிவிக்கை அனுப்பப்பட்டது என்றும் இரண்டாவது முறையாக 18 ஜூலை 2016 அன்று அறிவிக்கை அனுப்பப்பட்டது என 4.12.2019 அன்று அமித் ஷா பெயரில் வெளிவந்த நாடாளுமன்றக் குறிப்பில் இருக்கிறது.
முடிவு:
CAA சட்டத்தைக் கொண்டுவந்தது காங்கிரசு, மக்களவையில் CAA வை ஆதரித்து திமுக வாக்களித்தது என Raavanaa ராவணா YouTube பக்கத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளர் காளியம்மாள் கூறிய தகவல்கள் பொய்யானது என The Media Monitoring உறுதி செய்கிறது.
முரளிகிருஷ்ணன் சின்னதுரை
முதன்மை ஆசிரியர்