கூற்று:
தமிழ்நாட்டை விட உத்தரப் பிரதேசம், குஜராத் வளர்ந்திருக்கின்றன எனும் பொருளில் வேலூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு தெரிவத்தார்.
சரிபார்ப்பு:
05.04.2024 அன்று வேலூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் குஷ்பு. தென்மாநிலங்களின் வளர்ச்சி வட மாநிலங்களை விட அதிமாகத் தான் இருக்கிறது என செய்தியாளர் கூறிய கருத்தினை இடைமறித்த குஷ்பு “இல்லையே, எதுல எதுல இருக்கு, இல்ல எந்த மாநிலத்தில் இருக்கு?” என வினவினார்.
அதற்குப் பதிலளித்த செய்தியாளர் “பொருளாதாரத்தில் தென் மாநிலங்களில் தான் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது” எனக் கூற, குஷ்பு மீண்டும் இடைமறித்து “எங்கேனு சொல்லுங்க, எந்த மாநிலம் எனச் சொல்லுங்க?” எனக் கேட்டார். மீண்டும் தொடர்ந்த செய்தியாளர் “தென்மாநிலங்கள்னு பொதுவா சொல்றேன்” எனக் கூறியதும், “பொதுவாக இல்ல..குறிப்பிட்டு…” என குஷ்பு பேசிக் கொண்டிருக்கும் போது செய்தியாளர் வடமாநிலங்களை விட எனச் சொன்னார்.
பதிலளித்த குஷ்பு “இல்லைங்க, நீங்க வட மாநிலங்களை கம்பேர்(Compare) பண்ணி பாருங்க, இன்னைக்கு வந்து பிஸ்னஸ்(Business) எங்கே நடக்குது உங்களுக்கு? தி மேக்சிமம் பிஸ்னஸ் எங்க நடக்குது? உத்தரப் பிரதேசத்தில் நடக்குது நீங்கள் இருக்கு தமிழ்நாட்டுல இருக்குன்னு நீங்கள் சொல்வீங்க, ஓகே, ஆனா மேக்சிமம் பிஸ்னஸ் இன்னைக்கு உத்தரப் பிரதேசத்தில் நடக்குது. இன்னைக்கு FDI ஐ சொல்லும் போது எங்க மேக்சிமம் நடக்குது உங்களுக்கு, குஜராத் அண்ட் உத்தரப் பிரதேஷ் அந்த மாநிலங்களில தான் நடக்குது. தமிழ்நாட்டுல நம்ம சொல்லிக்கிறதுக்கு, எஸ் மாநிலம் வந்து முன்னேறனும்னு நாங்களும் ஆசைப் படுகிறோம். நானும் இந்த மாநிலத்தை சேர்ந்தவ தான். முதலமைச்சர் எனக்கும் முதலமைச்சர் தான். கட்சி ரீதியாக வேறவேற இடத்துல இருந்தாலும் எதிர்ப்புத் தெரிவிச்சாலும் எனக்கும் மாநிலம் தான் என்னுடைய முதலமைச்சர் தான். என் மாநிலம் முன்னேறனும் நான் ஆசைப் படுறேன். அப்படி ஆசைப்படும் போது பாஜக வந்தா தான் முன்னேற முடியும்னு நான் சொல்றேன்” எனக் கூறினார்.
அவரது பதில்களை The Media Monitoring ஆராய்ந்து பார்க்கத் தொடங்கினோம். இந்திய அளவில் உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார நிலை என்ன எனத் தேடிப் பார்த்தோம்.
உத்திரப் பிரதேச மாநிலத்தின் தேசிய தகவல் மையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான niveshmitra.up.nic.in பொருளாதாரத்தில் மூன்றாம் இடத்தில் இருப்பதாகப் பதிவு செய்துள்ளது.
https://niveshmitra.up.nic.in/AdvantageUP.aspx
தமிழ்நாடு அரசின் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இரண்டாம் இடத்தில் இருப்பதாகப் பதிவு செய்துள்ளது.
https://www.msmetamilnadu.tn.gov.in/why-tamilnadu.php
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் குஜராத்தின் பங்களிப்பு ஐந்தாம் இடத்தில் இருப்பதாக குஜராத் அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான study.gujarat.gov.in ல் பதிவு செய்துள்ளது.
https://study.gujarat.gov.in/Pages/Contents/%20whygujarat
அந்நிய நேரடி முதலீடு குறித்து இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான investindia.gov.in ல் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் முதல் ஐந்து இடங்களில் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், டெல்லி மற்றும் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளன.
https://www.investindia.gov.in/foreign-direct-investment
இரண்டாம் இடத்தில் கர்நாடாகாவும், மூன்றாம் இடத்தில் குஜராத்தும் ஐந்தாம் இடத்தில் தமிழ்நாடும் இடம்பெற்றிருக்கின்றன. முதல் ஐந்து இடத்தில் உத்தரப் பிரதேசம் இடம்பெறவில்லை.
முடிவு:
தமிழ்நாட்டை விட உத்தரப்பிரதேசம் வளர்ந்துள்ளது என பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு கூறியது உண்மையல்ல. அந்நிய நேரடி முதலீட்டை தமிழ்நாட்டை விட குஜராத் அதிகம் பெற்றிருந்தாலும், பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டை விட குஜராத் பின் தங்கியுள்ளது. உ.பி., குஜராத்தை விட தமிழ்நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை ஆதாரத்துடன் உறுதி செய்கிறது The Media Monitoring.
முரளிகிருஷ்ணன் சின்னதுரை,
முதன்மை ஆசிரியர்.