Factcheck

சமூக ஊடகங்களில் உலவும் த.வெ.க தலைவர் அறிக்கை போலியானது!

கூற்று:
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திராவிடப் பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் எனும் உள்ளடக்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டது போல படம் ஒன்று சமூக ஊடகங்களில் உலவி வருகிறது.

சரிபார்ப்பு:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பெயரில் படம் அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் உலவுகிறது.

அப்படத்தில், 31.03.2024 என தேதியிட்டு

எல்லோருக்கும் வணக்கம்,

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை மட்டும் பாராமல் ஒட்டுமொத்த தேசத்தையும் வளர்ச்சியையும் யார் கருத்தில் கொண்டு செயல்படுகிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்.

விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்.

எனத் தட்டச்சு செய்யப்பட்டிருந்து.

உலவும் படத்தில் உள்ள சொற்றொடர்களில் இலக்கணப் பிழைகள் இருந்தன. எழுத்துருக்களும் அதன் அளவுகளும் வெவ்வேறாகவும் இருந்தன. உண்மையான தமிழக வெற்றிக் கழக அறிக்கைகளில் எழுத்துருக்களின் அளவும் பயன்பாடும் சீராக இருக்கிறது.

மேலும் உலவும் படம் உண்மையானதா என அறிந்து கொள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் தேடிய போது, உலவும் படம் போன்ற அறிக்கை ஏதும் வெளியாகவில்லை.

மார்ச் 7, 2024 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் பெயரில் வெளிவந்த உறுப்பினர் சேர்க்கை அணி – நிர்வாகிகள் நியமன அறிவிப்பு அறிக்கையின் இரண்டாம் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் அன்புடன் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருடைய கையெழுத்துடன் இருக்கும் அச்சு ரேகையும், சமூக ஊடகங்களில் உலவும் படத்தில் இருக்கும் அன்புடன் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருடைய கையெழுத்துடன் இருக்கும் அச்சு ரேகையும் ஏறத்தாழ ஒரே இடத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

எனவே, மார்ச் 7ஆம் தேதி வெளியான அறிக்கையின் இரண்டாம் பக்கத்தை பதிவிறக்கும் செய்து, போலிச் செய்தியைப் பரப்புவதற்குப் பயன்படுத்திருக்கலாம்.

முடிவு:
திராவிடப் பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என சமூக வலைத்தளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெயரில் உலவும் அறிக்கை போலியானது!

முரளிகிருஷ்ணன் சின்னதுரை
முதன்மை ஆசிரியர்

Shares: