காசியில் இருக்கும் பாரதியாரின் குடும்பம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி யாரை குறிப்பிடுகிறார்
கூற்று:
மகாகவி பாரதியார் குடும்பம் இன்னும் காசியில் இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் தந்தி தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தார்.
பாரதியாரின் நேரடி தலைமுறையினர் தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொண்டுள்ளனர். காசியில் பாரதியார் குடும்பம் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிடுவது யார் என்பதை அறிந்துகொள்ள பாரதியாரின் எள்ளுப் பேரனான பாடலாசிரியர் நிரஞ்சன் பாரதியைத் தொடர்புகொண்டு பேசினோம்.
அதற்குப் பதிலளித்த நிரஞ்சன் பாரதி “நான் நிகழ்ச்சியின் முன்னோட்டத்தை மட்டும் தான் பார்த்தேன். எது தொடர்பாக அவர் அவ்வாறு கூறினார்?” என நம்மிடம் கேட்டார்
பின்னர் பதிலளித்த பாரதியாரின் எள்ளுப் பேரன் நிரஞ்சன் “பாரதியாரின் உறவினரான அவரது அத்தை குடும்பம் காசியில் இருக்கிறது, பாரதியார் சில ஆண்டுகள் அங்கு வசித்து வந்தார். அவரது அத்தை பெயரனான கிருஷ்ணன் 95 வயது வரை அங்கு தான் வாழ்ந்தார். அவர்களுக்கு 5 பிள்ளைகள் அவர்கள் தான் காசியில் இருக்கிறார்கள். பாரதி அங்கு தங்கியிருந்ததால் உறவினர்களான அவர்களையும் பாரதி குடும்பம் எனக் கூறியிருக்கலாம், பாரதியாரின் நேரடித் தலைமுறைகள் யாரும் அங்கில்லை” எனத் தெரிவித்தார்.